தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காதது உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது. பாஜக பின்புலத்தில் இருந்து கொண்டு ஆளுநரை இயக்குவதாக மக்கள் பேசுகின்றனர். மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்கி, தனிப்பெரும் கட்சியான தவெக-வை ஆட்சியமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோளில், தமிழக நலன் கருதி காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தவெக-விற்கு ஆதரவளித்துள்ளன. அதேபோல், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசியல் செய்து வரும் தம்பி திருமாவளவன் அவர்கள், உடனடியாகத் தனது ஆதரவைத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வழங்க வேண்டும். அவரது ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் ஆளுநர் விஜய்யை அழைத்து முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.
தமிழகத்தில் ஒரு புதிய ஆட்சியை ஏற்படுத்தவும், மாற்றத்தைக் கொண்டு வரவும் திருமாவளவனின் ஆதரவு மிக முக்கியமானது என ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அமையவிருக்கும் அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கித் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு விசிக உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
விஜய்யின் ஆட்சி அமையப் பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாக ஆதரவுக் குரல் கொடுத்திருப்பதுடன், திருமாவளவனுக்கு ‘தம்பி’ என அழைத்து வேண்டுகோள் விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக இன்று காலை தனது முடிவை அறிவிக்க உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் காந்தப்புலமாக மாறியுள்ளது.
