பேருந்து கட்டண உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரவும் தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு என்பது அடிக்கடி பரவும் வதந்தியாகவே இருந்து வருகிறது. ஆனால், அரசின் நிலைப்பாடு தெளிவானது – கட்டண உயர்வு எவ்வித சூழலிலும் இல்லை” என்று கூறினார்.
மேலும், “ஏழை, எளிய மக்கள் மீது கூடுதல் சுமை ஏற்படக்கூடாது என்பதே மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தெளிவான முடிவாகும். கடந்த காலங்களில் பலமுறை கட்டண உயர்வுக்கான சூழ்நிலைகள் ஏற்பட்டபோதும், அந்த பரிந்துரைகளை முதல்வர் அவர்கள் நிராகரித்து, கட்டண உயர்வை தடுப்பதற்கான உறுதியான அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதையே அரசு கடைபிடித்து வருகிறது” எனவும் தெரிவித்தார்.
