தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தின் உதகமண்டலம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

உதகை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் போஜராஜன், கடும் போட்டிக்கு இடையே வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 48,181 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் இப்ராஹிம் 46,950 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இறுதியாக, தவெக வேட்பாளரை விட 1,231 வாக்குகள் கூடுதலாகப் பெற்று போஜராஜன் தனது வெற்றியை உறுதி செய்தார்.

தமிழகத்தில் இந்த முறை பாஜக 27 தொகுதிகளில் களம் கண்டிருந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், பாஜகவிற்கு கிடைத்துள்ள முதல் வெற்றி இதுவாகும். மலை மாவட்டமான நீலகிரியில் பாஜகவின் இந்த வெற்றி, அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது பல சுற்றுகளில் பாஜக மற்றும் தவெக வேட்பாளர்களுக்கு இடையே இழுபறி நீடித்தது. மிகக் குறைந்த வாக்கு வித்தியாசமே இருந்ததால் தொகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. இறுதிக்கட்ட முடிவுகள் வெளியான போது, போஜராஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றிச் செய்தி வெளியானதும் உதகையின் பல்வேறு இடங்களில் பாஜக தொண்டர்கள் கூடி, வெற்றிக் கோஷங்களை எழுப்பியும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.