சிவகாசி அருகே பல ஆண்டுகளாகச் செயல்படாமல் மூடிக்கிடந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் ‘பிரில்லியன்ட் பட்டாசு ஆலை’ என்ற பெயரில் தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இந்த ஆலை கடந்த பல ஆண்டுகளாக எவ்வித செயல்பாடும் இன்றி மூடப்பட்டுக் கிடந்துள்ளது.

இந்நிலையில், இன்று இந்த மூடப்பட்ட பட்டாசு ஆலையின் வளாகத்திற்குள் சிலர் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் புகைபிடித்துவிட்டு, அணைக்காமல் வீசியதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு வீசப்பட்ட புகைத்துண்டு, அங்கு நீண்ட நாட்களாகக் கொட்டப்பட்டிருந்த கழிவுப் பட்டாசுகள் மற்றும் மருந்துகளின் மீது விழுந்ததில் தீப்பொறி ஏற்பட்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்த எதிர்பாராத வெடி விபத்தில், அங்கு நின்றுகொண்டிருந்த ஹரி பாரத், சுபாஷ், மாரிச் செல்வம் ஆகிய மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். வெடி சத்தம் கேட்டு ஓடிவந்த அருகில் இருந்தவர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர், காயமடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் காவல்  துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேற்கொண்டு தீ பரவாமல் தடுத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மூடிக்கிடந்த ஆலைக்குள் அவர்கள் நுழைந்தது ஏன் என்பது குறித்தும், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.