தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கூட்டணியிலும் இணையாமல், புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசித்த பின் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, “தமிழகத்தின் நலன் கருதியும், கட்சியின் கொள்கை முழக்கங்களை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கவும் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். குறிப்பாக, கட்சிக்கு வலுவான செல்வாக்கு உள்ள 60 முதல் 70 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

போட்டியிடும் தொகுதிகள் எவை மற்றும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், வேட்பாளர் பட்டியலை நாளை மறுநாள் (மார்ச் 29) வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் பெரிய கூட்டணிகள் களம் இறங்கியுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள புதிய தமிழகம் கட்சியின் இந்தத் தனித்துப் போட்டி முடிவு, தேர்தல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மும்முனைப் போட்டி நிலவும் தொகுதிகளில் இக்கட்சியின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மேலும் இதன் மூலம் தமிழகத்தில் தற்போது தேர்தலில் 6 முனைப் போட்டிகள் நிலவுகிறது. அதாவது திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம், ராமதாஸ் மற்றும் சசிகலாவின் புதிய கூட்டணி என ஐந்து முனை போட்டிகள் நிலவிய நிலையில் தற்போது டாக்டர் கிருஷ்ணசாமி தனித்துப் போட்டியிடுவதால் 6 முனை போட்டியாக மாறியுள்ளது.