தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் கட்சி அதிரடியாக வெளியேறியுள்ளது. நீண்ட நாட்களாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த டாக்டர் கிருஷ்ணசாமி, எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் கடும் அதிருப்தியில் இருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நம்மைப் புறக்கணித்தவர்களை, நாம் புறக்கணிப்போம்” என ஆவேசமாக முழக்கமிட்டு, வரும் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளார். ​சுமார் 70 தொகுதிகள் வரை தனது கட்சி வேட்பாளர்களைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வரும் மார்ச் 29-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தென் மாவட்டங்களில், புதிய தமிழகத்தின் இந்தத் தனித்துப் போட்டி முடிவு எடப்பாடி பழனிசாமி தரப்புக்குக் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. “கூட்டணி இல்லை என்றாலும் மக்கள் ஆதரவு எங்களுக்கு உண்டு” எனத் துணிச்சலாகக் களம் காணும் கிருஷ்ணசாமியின் இந்த முடிவு, தேர்தல் களத்தை இப்போதே சூடாக்கியுள்ளது.