சென்னை அடுத்த நாவலூரில் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் வீடு இடிந்து விழுந்ததில், இரு பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் பகுதியில் இன்று (மார்ச் 15) அதிகாலை குடியிருப்பொன்றில் எதிர்பாராத விதமாக கியாஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இந்த வெடிவிபத்தின் வீரியத்தால் வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை தீரன் மற்றும் 4 வயது பெண் குழந்தை கிரீஷிகா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் குழந்தைகளின் பெற்றோர் சஞ்சய் (31), சோனியா (26), சோனியாவின் தாயார் சித்ரா (46) மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரதீப் (7) என்ற சிறுவன் ஆகிய நால்வரும் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் கிட்டத்தட்ட மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளது.

சிலிண்டர் கசிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை மாவட்ட உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.