தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிகளை உறுதிப்படுத்தும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் கொங்குநாடு விவசாயிகள் கட்சி இணைந்துள்ளது.
தேர்தலையொட்டி மேற்கு மற்றும் தென் மண்டலங்களைச் சேர்ந்த பல்வேறு சிறிய கட்சிகள் அதிமுகவிற்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கொங்குநாடு விவசாயிகள் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜாமணி, இன்று சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை (EPS) நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜாமணி, வரும் தேர்தலில் அதிமுகவிற்குத் தனது கட்சி நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதிமுக ஆதரவு குறித்து அவர் மேலும் கூறுகையில், “தமிழகத்தில் கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் இருந்தபோதுதான் விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டன. எனவே, விவசாயிகளின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.
ஏற்கனவே பல்வேறு மண்டலக் கட்சிகள் அதிமுகவுடன் கைகோர்த்து வரும் நிலையில், தற்போது கொங்குநாடு விவசாயிகள் கட்சியின் இந்த இணைவு அக்கட்சிக்கு மேலும் பலம் சேர்ப்பதாகக் கருதப்படுகிறது.
