மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், கூட்டணி கட்சியான திமுகவை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர், திமுகவின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாகவும் நேரடியாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசுகையில், “எங்களது (காங்கிரஸ்) பலம் இல்லாமல் நீங்கள் அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்த கடந்த கால நிகழ்வுகளை நாங்களும் இன்னும் மறக்கவில்லை” என எச்சரிக்கை விடுத்தார்.

கூட்டணி தர்மம் குறித்துப் பேசிய அவர், “நாங்கள் உங்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறோம். அதே மரியாதையை நீங்களும் எங்களுக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும். நீங்கள் செய்த பல தவறுகளுக்காகப் பழியைச் சுமந்தவர்கள் நாங்கள். இனி எங்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்றால், நாங்கள் திருப்பி அடிப்போம்” என ஆவேசமாகத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்துப் பேசிய அவர், “பாஜகவை உண்மையாக எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரஸாருக்கு மட்டும்தான் இருக்கிறது. ராகுல் காந்தி விவகாரத்தில் மோடி அரசை எதிர்த்துப் போராடியதற்காக 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதில் 7 பேர் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஒருவர் சிபிஎம் உறுப்பினர். நாடாளுமன்றத்தில் யார் பலமாகப் போராடுகிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி” என்றார்.

மேலும், திமுகவின் நிலைப்பாட்டைக் கிண்டல் செய்யும் வகையில் பேசிய அவர், “துணை நிற்கிறோம் என்று மேடைகளில் சொல்பவர்கள், நாடாளுமன்றத்தில் ஏன் சஸ்பெண்ட் ஆகாமல் தப்பித்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஓரமாக ஒதுங்கிப் போய் (சைடு வாங்கி) அவர்களுக்கு வணக்கம் சொல்லக்கூடிய பழக்கம் காங்கிரஸ்காரனுக்கு கிடையவே கிடையாது” எனச் சாடினார்.

மதுரையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாணிக்கம் தாகூரின் இந்தப் பேச்சு, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை அரசியல் நோக்கர்களிடையே எழுப்பியுள்ளது.