இந்தியப் பில்லியனரும் வேதாந்தா (Vedanta) குழுமத்தின் தலைவருமான அனில் அகர்வாலுக்கு லண்டனில் உள்ள ‘கார்ல்டன் ஹவுஸ் டெரஸ்’ (Carlton House Terrace) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களா, ஒரு பிரம்மாண்ட அரண்மனையை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது. லண்டனின் மிகவும் மதிப்புமிக்க பகுதியான செயின்ட் ஜேம்ஸ் பூங்காவிற்கு எதிரேயும், பக்கிங்காம் அரண்மனைக்கு மிக அருகாமையிலும் இந்த ஆடம்பர இல்லம் அமைந்துள்ளது. புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் ஜான் நாஷ் என்பவரால் பிரிட்டனின் ரீஜென்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த வரலாற்றுப் பெருமை வாய்ந்த கட்டிடம், முற்காலத்தில் பிரிட்டன் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது அனில் அகர்வாலின் கைவசம் உள்ள இந்த மாளிகையில், ஒரு பட்டனை அழுத்தினால் அங்கிருக்கும் நடன அரங்கு அப்படியே தரைக்குக் கீழே இறங்கி, சொகுசு நீச்சல் குளமாக மாறும் சினிமா பாணி அதிநவீன வசதி உள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த பங்களாவின் உட்புறத்தில் பிரிட்டன் நாட்டின் பாரம்பரிய கம்பீரமும், அனில் அகர்வாலின் சொந்த மாநிலமான பீகாரின் இந்தியப் பாரம்பரியக் கலைகளும் கலந்த ஒரு தனித்துவமான வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
மாளிகையின் ஒவ்வொரு பகுதிக்கும் எளிதாகச் செல்ல பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய கண்ணாடி லிஃப்ட் வசதியும், அறைகளை அலங்கரிக்கும் விலைமதிப்பற்ற கிரிஸ்டல் விளக்குகளும் இதற்கு மேலும் ராஜ கம்பீரத்தைத் தருகின்றன. சூரிய ஒளி மாளிகையின் அனைத்துப் பகுதிகளுக்கும் தடையின்றி வரும் வகையிலான சிறப்பான காற்றோட்ட வசதி, பசுமையான மரங்கள் மற்றும் கண்ணாடியால் ஆன கலைநயமிக்க வேலைப்பாடுகள் இதன் அழகைக் கூட்டுகின்றன. உலகளவில் பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதியாக இருந்தாலும், இந்த மாளிகையின் ஒரு பகுதியில் அவர் அமைத்துள்ள அமைதியான பிரார்த்தனைத் தலம், அவரது ஆன்மீகப் பற்றையும் இந்தியப் பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
