தமிழகத்தில் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கான சிறப்பு ஓய்வூதியத் தொகையை உயர்த்தி தமிழக அரசு இன்று (பிப்ரவரி 26) அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஓய்வூதியம் இனி ரூ.3,400-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், இவர்கள் பணி நிறைவு பெற்று ஓய்வு பெறும்போது வழங்கப்படும் ஒட்டுமொத்த பணிக்கொடைத் தொகை ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு பல்லாயிரக்கணக்கான பணியாளர்களுக்கு வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், குறு அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வனக்களப் பணியாளர்கள் ஆகியோருக்கும் ஓய்வூதியத் தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் மிகக்குறைவாக இருந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த உயர்வு அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவும்.
மேலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த நடவடிக்கை, அடித்தட்டு மக்களுக்காகப் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
