சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் முக்கியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் படும் அவதியைக் குறைக்க, தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே இன்று முதல் 40 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன் படி காலை நேரம் (தாம்பரத்தில் இருந்து) காலை 6:30 மணி முதல் 8:43 மணி வரை, ஒவ்வொரு 7 நிமிட இடைவெளியிலும் பேருந்துகள் புறப்படும். இவை கிண்டி, அண்ணாசாலை, சேப்பாக்கம், தலைமைச் செயலகம், தி.நகர், எழும்பூர், சென்ட்ரல் மற்றும் பாரிமுனை வழியாகச் செல்லும்.
மாலை நேரம் (கடற்கரையில் இருந்து): வேலை முடிந்து வீடு திரும்புபவர்களுக்காக, மாலை 5:00 மணி முதல் இரவு 7:13 மணி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இரு மார்க்கங்களிலும் தலா 20 பேருந்துகள் என மொத்தம் 40 பேருந்து சேவைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்தச் சிறப்புப் பேருந்துகளில் ஒரு முக்கிய சலுகையாக, ரயில்வே மாதாந்திர சீசன் டிக்கெட் (Pass) வைத்திருப்பவர்கள் அல்லது அன்றைய தினத்திற்கான ரயில் டிக்கெட் வைத்திருப்பவர்கள் இலவசமாகப் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்துகளின் முன்பக்கக் கண்ணாடியில் ‘SOUTHERN RAILWAY CHARTERED BUS’ என்ற அறிவிப்புப் பலகை ஒட்டப்பட்டிருக்கும். மேலும், இந்தப் பேருந்துகளில் டிக்கெட் பரிசோதகர்கள் (TTE) சோதனையில் ஈடுபடுவார்கள் என்பதால், பயணிகள் உரிய பயணச் சீட்டுகளைக் கைவசம் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மின்சார ரயில் சேவை குறைப்பால் தவித்த சென்னை புறநகர்ப் பகுதி மக்களுக்கு, ரயில்வேயின் இந்த ஒருங்கிணைந்த பேருந்து சேவை பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
