தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன், வீட்டில் தவறி விழுந்ததில் காயமடைந்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் மூத்த அமைச்சரான துரைமுருகன் (87), வயது மூப்பு காரணமாகச் சமீபகாலமாகப் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்குச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 10) தனது இல்லத்தில் இருந்தபோது அவர் எதிர்பாராதவிதமாகத் தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். தற்பொழுது நிபுணத்துவ மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இரவோடு இரவாக அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு அமைச்சருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், அமைச்சரின் குடும்பத்தினரிடம் பேசி ஆறுதல் கூறினார்.
கட்சியின் மூத்த தூணாக விளங்கும் பொதுச்செயலாளர் துரைமுருகன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டி கட்சியினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
