இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த பழம்பெரும் நடிகை சந்தியா சாந்தாராம் (வயது 87) காலமானார். அவர், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான வி. சாந்தராமின் மனைவியும் ஆவார். 1950, 60-களில் வி. சாந்தராம் இயக்கிய திரைப்படங்களில் நடித்து, தனது நடிப்பு மற்றும் நடன திறமைகளால் பார்வையாளர்களின் மனதில் நீடித்த இடம் பெற்றிருந்தார். குறிப்பாக 1955 இல் வெளியான “ஜனக் ஜனக் பயல் பஜே”, 1957இல் வெளியான “தோ ஆங்கே பரா ஹாத்” உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது.

1959ஆம் ஆண்டு “நவ்ராங்” திரைப்படத்தில் அவர் நிகழ்த்திய வேடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இசை, நடனம் மற்றும் காட்சிப்படுத்தலின் புதிய முயற்சிகளால் அந்த படம் தனித்துவமாக அமைந்தது. இதில் இடம்பெற்ற “ஜா ரே ஹட் நட்கட்” உள்ளிட்ட பாடல்களில் அவர் வெளிப்படுத்திய நடனப்பாங்கு இசைத்துறையில் வரவேற்பை பெற்றது.

மராத்தி சினிமாவிலும், 1972இல் வெளிவந்த “பிஞ்ச்ரா” திரைப்படம் அவரது மிக முக்கியமான படைப்பாகும். சமூகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் இத்திரைப்படம் மற்றும் அதில் இடம்பெற்ற “மாலா லாக்லி குனாச்சி உச்கி” போன்ற பாடல்கள், சந்தியாவை மராத்தி திரைத்துறையின் முக்கிய நடிகையாக உருவாக்கின. ஆந்திர மாநிலத்தில் பிறந்த சந்தியா, பின்னர் மும்பைக்கு வந்து திரைப்படத் துறையில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தார். வி. சாந்தராமின் மூன்றாவது மனைவியாகவும், அவரது பல படங்களில் முன்னணிப் பெண்ணாகவும் இருந்தார்.

சந்தியாவின் மறைவுக்கு, திரைப்படத் துறையினர் மட்டுமின்றி, அரசியல் மற்றும் விளையாட்டு துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிஜேபி அரசியல்வாதி மற்றும் கிரிக்கெட் நிர்வாகி ஆஷிஷ் ஷெலர், அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து, “சந்தியாவின் மறக்கமுடியாத படைப்புகள் என்றென்றும் ரசிகர்களின் மனதில் நிறைந்திருக்கும்” எனத் தெரிவித்தார். மேலும் இந்தி மற்றும் மராத்தி சினிமாவை இணைக்கும் பாலமாக இருந்த சந்தியாவின் பங்களிப்பு, இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கியமானதாக மதிக்கப்படுகிறது.