தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆணையராக டிஜிபி சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஓய்வு பெற உள்ள நிலையில், அரசு இவரது அனுபவத்தை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

அண்மையில் தமிழக அரசு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தனிச்சிறப்பு ஆணையத்தை அமைப்பதற்கு முடிவு எடுத்துள்ளது. அதன் அடிப்படையில், இந்த புதிய பதவிக்கு சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீராஜ்குமார் வெளியிட்டுள்ளார்.

சுமார் 35 ஆண்டுகள் காவல் துறையில் சேவை புரிந்த சங்கர் ஜிவால், பல்வேறு முக்கிய பதவிகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். இந்த துறையில் அவரது அனுபவம் தீயணைப்பு துறையின் முன்னேற்றத்திற்கு பலனளிக்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பட்டாசு விபத்துகள், தீவிபத்துகள் போன்ற பேரழிவுகளை தடுப்பதற்கான வழிமுறைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுப்பது, தேவையான நவீன உபகரணங்கள் வாங்க ஆலோசனை வழங்குவது போன்ற பணிகளுக்காக இந்த ஆணையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.