பெண்களின் பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கத்தில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் “இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்” திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டலின் பேரில், சென்னை மாநகரில் 250 பெண்களுக்கு ஆட்டோ ஓட்டும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8, 2025 அன்று முதல்வர் சில பெண்களுக்கு இளஞ்சிவப்பு CNG ஆட்டோக்களை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். தற்போது மூன்றாம் கட்டமாகவும் மேலும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களுக்கு முழுமையான உதவியுடன் தொழில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஆட்டோவிலும் GPS இணைப்பு மற்றும் காவல்துறை அவசர எண்கள் பொருத்தப்பட்டிருப்பதால், பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

“ஊர் கேப்ஸ்” செயலி மூலம் பயணங்களை முறைபடுத்தவும், எந்தவித கமிஷனும் இல்லாமல் (zero commission) வேலை கிடைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தகுதியான பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள 15.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்தப் பயன்பாட்டினை மகளிர், சிறுமிகள் மற்றும் பாதுகாப்பற்ற பெண்களின் சுயதொழில் மேம்பாட்டிற்கான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.