ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடிக்கு ஏற்பட்ட மிக மோசமான காயம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர வைத்துள்ளது.

டெல்லி அணி நிர்ணயித்த 265 ரன்கள் என்ற இமாலய இலக்கை பஞ்சாப் அணி துரத்திக்கொண்டிருந்தபோது, பிரியான்ஷ் ஆர்யா அடித்த உயரமான பந்தை கேட்ச் பிடிக்க முயன்றார் என்கிடி. துரதிர்ஷ்டவசமாக பந்தின் திசையைத் தவறாகக் கணித்த அவர், பின்னோக்கிச் சரிந்து விழுந்தபோது அவரது தலையின் பின்பகுதி தரையில் மிகப்பலமாக மோதியது. இதில் நிலைகுலைந்து போன அவர் வலியால் துடித்ததைக் கண்டு மைதானமே ஒரு நிமிடம் உறைந்து போனது.

உடனடியாக மைதானத்திற்குள் விரைந்த பிசியோதெரபிஸ்டுகள் சுமார் 20 நிமிடங்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். நிலைமை மோசமாக இருந்ததால், அவர் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்கப்பட்டு, அங்கேயே தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டதுடன், இரு அணி வீரர்களும் மிகுந்த சோகத்தில் காணப்பட்டனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் “இது பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக இருக்கிறது” எனப் பதிவிட்டு, அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.