தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் திமுகவினரிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஆழ்வார்பேட்டை புனித பிரான்சிஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 13-வது வாக்குச்சாவடிக்குச் சென்றார். அப்போது, அடையாள அட்டை இல்லாத நபர்கள் வாக்குச்சாவடிக்குள் இருப்பதாகவும், அவர்கள் கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாகவும் தமிழிசை குற்றம்சாட்டினார். இதற்கு அங்கிருந்த திமுக முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டதால் வாக்குச்சாவடி வளாகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை மோசமடைவதைக் கண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், கூட்டத்தைக் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். வாக்குச்சாவடிக்குள் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த நபரை வெளியேற்ற போலீசார் தயக்கம் காட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த துணை ராணுவத்தினர் அதிரடியாகச் செயல்பட்டு அந்த நபரை வாக்குச்சாவடியை விட்டு வெளியேற்றினர்.
மேலும் இந்த மோதல் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாக மயிலாப்பூர் ஆழ்வார்பேட்டை பகுதியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டு, பதற்றமான சூழல் நிலவியது. தற்போது கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழிசை சவுந்தர்ராஜன் வாக்குப்பதிவு நேர்மையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
