அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாகச் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பகிரங்கமாகப் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, கட்சியினரிடம் ஒரு வார்த்தை கூட ஆலோசிக்காமல் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்ததாகவும், அப்படிக் கூட்டணி வைத்ததற்கான காரணத்தைக் கூட அவர் யாரிடமும் சொல்லவில்லை என்றும் சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், 2024 மக்களவை தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் எனத் தான் கூறிய கருத்தை எடப்பாடி பழனிசாமி காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

கூட்டணிக் கட்சிகளை நடத்துவதிலும் எடப்பாடி பழனிசாமி சரியாகச் செயல்படவில்லை என்று கூறிய அவர், தேமுதிகவுக்கு வாக்கு கொடுத்தபடி எம்பி சீட் ஒதுக்கச் சொன்னபோது, தனது கருத்தை உதாசீனப்படுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார்.

கட்சியின் மூத்த தலைவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் முடிவுகள் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதைச் சி.வி. சண்முகத்தின் இந்தப் பேச்சு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.