ஈரான் மீது அமெரிக்கா தொடுத்துள்ள போர் நியாயமானதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஈரானின் அணு ஆயுதத் திறன் குறித்து அமெரிக்கத் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கபார்ட் அளித்துள்ள சாட்சியம் சர்வதேச அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்கச் செனட் உளவுத்துறை குழுவிடம் துளசி கபார்ட் தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வமான அறிக்கையில், கடந்த 2025-ஆம் ஆண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’  நடவடிக்கையிலேயே ஈரானின் அணு ஆயுதச் செறிவூட்டும் திறன்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை மீண்டும் கட்டமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் அந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

“ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை வேகமாகப் புனரமைத்து வருகிறது, இன்னும் சில வாரங்களில் அணு ஆயுதத்தைப் பெற்றுவிடும்” என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வந்த கருத்துக்கு இந்த அறிக்கை முற்றிலும் முரணாக அமைந்துள்ளது. ஈரானால் “உடனடி அணுசக்தி அச்சுறுத்தல்” இருப்பதாகக் கூறித்தான் டிரம்ப் இந்தப் போரைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவரும், ஈரான் தற்போது அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடவில்லை என்பதைச் சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

செனட் விசாரணையின் போது, இந்த முக்கியமான தகவலைத் தனது வாய்மொழி சாட்சியத்தில் துளசி கபார்ட் ஏன் குறிப்பிடவில்லை என்று ஜனநாயகக் கட்சியினர் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த கபார்ட், நேரக் கட்டுப்பாடு காரணமாகச் சில பகுதிகளைத் தன்னால் வாசிக்க முடியவில்லை என்று விளக்கமளித்தார். இருப்பினும், இந்தத் தகவல் மறைக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

போர் தொடங்கி 20 நாட்கள் கடந்துள்ள நிலையில், அதன் பாதிப்புகள் உலகெங்கும் எதிரொலிக்கின்றன. அதன்படி ஹார்மூஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றத்தால், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலரைத் தாண்டியுள்ளது.  இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து, பணவீக்கத்தின் தாக்கம் காணப்படுகிறது.

மேலும் இந்த உளவுத்துறை அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, இந்தப் போர் உண்மையான அச்சுறுத்தலால் தொடங்கப்பட்டதா அல்லது ஆட்சி மாற்றத்திற்காகத் திட்டமிட்டு நடத்தப்படும் அரசியல் உத்தியா என்ற விவாதம் உலக அரங்கில் வலுத்துள்ளது.