அயர்லாந்து நாட்டின் கலாசாரம் மற்றும் அடையாளத்தைப் போற்றும் விதமாக, ஆண்டுதோறும் மார்ச் 17-ஆம் தேதி கொண்டாடப்படும் ‘செயின்ட் பேட்ரிக்’ தின அணிவகுப்புகள் நாடு முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்றன. தலைநகர் டப்ளினில் நடைபெற்ற தேசிய அணிவகுப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுத் தங்களது பாரம்பரியத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஆண்டு டப்ளின் அணிவகுப்பானது ‘வேர்கள்’ (Roots) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது. இதில் 12 பிரம்மாண்ட அலங்கார ஊர்திகள், 150-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் சுமார் 3,000 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். பெல்ஃபாஸ்ட் உள்ளிட்ட இதர நகரங்களிலும் இசை, நடனம் மற்றும் மாரத்தான் ஓட்டங்களுடன் விழா கோலாகலமாக அமைந்தது.

கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் சமூக வலைதளங்களில் இந்தப் பெருவிழா குறித்த கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அயர்லாந்தின் பாரம்பரிய அடையாளம் சிதைக்கப்படுவதாகப் பல உள்ளூர்வாசிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

“இது அயர்லாந்து வரலாற்றிலேயே மிகவும் வருத்தமான செயின்ட் பேட்ரிக் தினமாகும். அணிவகுப்பில் உள்ளூர் மக்களை விட வெளிநாட்டினரே அதிகம் காணப்படுகின்றனர்” என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். “செயின்ட் பேட்ரிக் தினம் என்பது இப்போது வெறும் பல்லின கலாசார தினமாக (Multicultural Day) மாறிவிட்டது; ஐரிஷ் மக்களுக்கென்று ஒரு தனித்துவமான நாள் இல்லாமல் போனது வேதனையளிக்கிறது” எனப் பலரும் தங்களது குமுறல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

 


சமூக வலைதளங்களில் அத்லோன் (Athlone) பகுதியில் நடைபெற்ற அணிவகுப்பில் இந்தியர்கள் அதிகளவில் பங்கேற்றதாகக் கூறி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அயர்லாந்தில் இந்திய சமூகத்தின் வளர்ச்சி சமீபகாலமாகப் பெருமளவு அதிகரித்துள்ளது இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) 2025-ஆம் ஆண்டு தரவுகளின்படி: அயர்லாந்தில் சுமார் 61,000 முதல் 1 லட்சம் வரை இந்தியர்கள் வசித்து வருகின்றனர். 2024-25 கல்வியாண்டில் மட்டும் 13,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அங்கு உயர்கல்வி பயின்று வருகின்றனர்.

குறிப்பாக, மருத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் (IT) இந்தியர்களுக்கு அதிகளவில் பணி உரிமங்கள் (Work Permits) வழங்கப்பட்டுள்ளன. மேலும் கலாசாரப் பரிமாற்றங்கள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை என்றாலும், பாரம்பரிய அடையாளத்தைக் காக்க வேண்டும் என்ற உள்ளூர் மக்களின் குரலும் அயர்லாந்தில் தற்போது வலுக்கத் தொடங்கியுள்ளது.