அதிமுக உட்கட்சி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அக்கட்சி தற்போது அதிகாரப்பூர்வமாக இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு (ஈபிஎஸ்) எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சட்டமன்றக் கட்சித் தலைவராக யாரை நியமிப்பது என்பதில் அதிமுக எம்.எல்.ஏ-க்களிடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று இரண்டு தனித்தனி கடிதங்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் சமர்ப்பிக்கப்பட்டன. அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எஸ்.பி. வேலுமணியை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, 30 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் சபாநாயகரிடம் வழங்கினர்.
மறுபுறம், எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றக் கட்சித் தலைவராக நியமிக்கக் கோரி 17 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து கடிதம் அளித்துள்ளனர்.பலப்பரீட்சையில் வேலுமணி கை ஓங்குகிறது தற்போதைய நிலவரப்படி, எடப்பாடி பழனிசாமியை விட எஸ்.பி. வேலுமணிக்கு கூடுதல் எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு வேலுமணிக்கு இருப்பதால், அவரே சட்டமன்றக் கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே தேர்தல் தோல்விகள் மற்றும் உட்கட்சிப் பூசல்களால் தவித்து வரும் அதிமுக, தற்போது சட்டமன்றக் குழுவிலும் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தற்காலிக சபாநாயகர் எடுக்கப்போகும் முடிவு, தமிழக அரசியலில் மிக முக்கியமான திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
