தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைக்கழக அனுமதியின்றி, கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்துப் பொதுவெளியில் பேசுவதற்கு முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது போன்ற எவ்விதச் செயல்பாடுகளுக்கும் தலைமைக்கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாக பெறப்பட வேண்டும் என அந்த உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் கட்டுப்பாட்டைப் பேணிக் காக்கவும், பொதுவெளியில் தவறான தகவல்கள் பரவுவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
