ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்த நாட்டின் உச்ச தலைவர் குடும்பத்தோடு கொல்லப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. தொடர்ந்து மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரானின் பல போர்க்கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழித்து வருகிறது. அந்த வகையில்
சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானின் ‘டெனா’ (Dena) போர்க்கப்பல் மீது அமெரிக்கப் படைகள் எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றித் தாக்குதல் நடத்தியுள்ளன. இச்சம்பவம் சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்தியக் கடற்படையின் அழைப்பை ஏற்று விருந்தினராகச் சென்ற ஈரானின் ‘டெனா’ போர்க்கப்பல், சுமார் 130 வீரர்களுடன் சர்வதேசக் கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது, ஈரான் கரையிலிருந்து சுமார் 2,000 மைல் தொலைவில் வைத்து அமெரிக்கப் படைகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அமெரிக்காவின் இந்த அத்துமீறிய செயலுக்கு நிச்சயம் கசப்பான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்; இதற்காக அமெரிக்கா நிச்சயம் வருந்தும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மோதல் காரணமாகப் பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
மேலும் இந்திய பெருங்கடலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்தியாவின் துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியதாக முன்பு செய்தி பரவியது. ஆனால் இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்ததோடு இதுபோன்ற தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
