தமிழக அரசியல் களத்தில் புயல் வேகத்தில் காய் நகர்த்தி வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று ஆளுநரிடம் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தைச் சமர்ப்பித்த கையோடு, தனக்கு ஆதரவு அளித்த இடதுசாரி தலைவர்களை நேரில் சந்தித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

ஆளுநர் மாளிகையிலிருந்து நேரடியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அலுவலகத்திற்குச் சென்ற விஜய், எவ்வித நிபந்தனையுமின்றி தவெக ஆட்சி அமைய ஆதரவு அளித்த மாநிலச் செயலாளர் வீரபாண்டியனுக்கு சால்வை அணிவித்துத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) தலைவர்களையும் சந்தித்து தனது மரியாதையை வெளிப்படுத்தினார். “பெரியவர்களின் ஆசியுடனும், தோழர்களின் ஆதரவுடனும் நல்லாட்சி அமையும்” என இந்தச் சந்திப்பின் போது விஜய் குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

விஜய்யின் இந்தத் திடீர் வருகையாலும், அவர் காட்டிய எளிமையாலும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் உற்சாகத்தில் களைகட்டியுள்ளன.