தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் அந்த கட்சியின் சார்பில் பிரம்மாண்டமாக மகளிர் தின கொண்டாட்ட விழா மாநாடு நடைபெறுகிறது. இந்த விழாவில் பேசிய விஜய் சிங்க பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனக் கூறியதோடு குட்டி ஸ்டோரியுடன் வழக்கம்போல் தன் பேச்சை தொடர்ந்தார். இந்த விழாவின்போது பல முக்கிய அறிவிப்புகளை பெண்களுக்காக வெளியிட்டுள்ளார்.

அதன்படி பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவதற்காக தனித்துறை தொடங்கப்படும். அந்த இலக்கா என்னுடைய நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இது என்னுடைய முதல் வாக்குறுதி.

தமிழகத்திலுள்ள 60 வயது வரை உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும். இதில் மத்திய மற்றும் மாநில அரசின் பதவிகளில் இருப்பவர்களுக்கு மட்டும் இந்த பணம் கிடைக்காது.

சமையல் கேஸ் சிலிண்டர் விலை நம்முடைய பெண்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வால் காதுகளில் புகை கண்களில் நீர். எனவே அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வருஷத்திற்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றார்.

அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் திருமணத்தின் போது பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் ஒரு பட்டு சேலை வழங்கப்படும்.

 

1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கல்வி இடையில் நிற்காமல் தொடர்வதற்காக தாய் அல்லது பாதுகாவலருக்கு வருடத்திற்கு 15,000 ரூபாய் வழங்கப்படும்.

வெற்றிப்பயணம் திட்டம் மூலம் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ராணி வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும். மாநிலம் முழுவதும் 500 குழுக்கள் உருவாக்கப்பட்டு பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் போடப்படும்.