மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர்  பண்டாரி மருத்துவமனை சாலையில் உள்ள ‘ராஜுல் டூப்ளக்ஸ்’ குடியிருப்பில், ரத்த வெள்ளத்தில் ஆண், பெண் என இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அழகு நிலையம் நடத்தி வந்த சக்தி கோஹ்லி என்ற பெண்ணை, அவருடைய தொழில் கூட்டாளியான தீபேஷ் ரத்தோர் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சக்தி கோஹ்லிக்கும், தீபேஷுக்கும் இடையே ஏற்பட்ட பணத்தகராறு காரணமாக இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசாரின் அலட்சியமே இதற்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர். தீபேஷ் ரத்தோர் கடந்த சில நாட்களாக சக்திக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதுகுறித்து ஏற்கனவே போலீசில் புகார் அளித்தும் எந்தவித கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.