மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம்  மாஸ்வத்-பந்தர்பூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று நெஞ்சை உலுக்கும் ஒரு கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. மாஸ்வத் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சித்தநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பக்தர்கள் ஒரு பிக்அப் வாகனத்தில் தங்களது கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த ஒரு ஆழமான கிணற்றுக்குள் தலைகுப்புற பாய்ந்து விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் பிக்அப் வாகனத்தில் இருந்த 8 பேர்  தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தன.

 

விபத்து நடந்தவுடன் உள்ளூர் மக்கள், போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் இணைந்து உடனடியாக போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையின் போது, கிணற்றுக்குள் இருந்து ஒரு பெண்ணையும், இளஞ்சிவப்பு (Pink) நிற உடையில் இருந்த ஒரு சிறுமியையும் மீட்புக்குழுவினர் தூக்கும் உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போர் நெஞ்சை கலங்க வைத்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.