‘மைக்ரோஸ்கேல் ஆப்டோஎலக்ட்ரானிக் டெதர்லெஸ் எலக்ட்ரோடு’ (MOTE) எனப் பெயரிடப்பட்டுள்ள, அரிசி மணியை விடச் சிறிய அதிநவீன வயர்லெஸ் மூளை உட்பொருத்தும் கருவி ஒன்று நரம்பியல் தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சுமார் 300 மைக்ரான் நீளமும், மனித முடியின் அகலமும் கொண்ட இந்தச் சாதனம், உலகின் மிகச் சிறிய நரம்பியல் இம்ப்லாண்ட் ஆகும்.

அலுமினியம் காலியம் ஆர்சனைடு என்ற சிறப்பு செமிகண்டக்டரால் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிப், மூளையில் இருந்து உருவாகும் நரம்பியல் சமிக்ஞைகளை அகச்சிவப்பு ஒளித் துடிப்புகளாக மாற்றி, மண்டை ஓடு வழியாக ஊடுருவி வெளியே உள்ள ரிசீவருக்குத் தகவலை அனுப்பும் வேலையைச் செய்கிறது. மேலும், இது தகவலை அனுப்பத் தேவையான சக்தியை ஒளியிலிருந்தே பெற்றுக் கொள்வது இதன் தனிச்சிறப்பாகும்.

இந்த ‘MOTE’ சாதனம், மூளைச் செயல்பாடுகளைப் பதிவு செய்வதில் உள்ள பல சிக்கல்களுக்குத் தீர்வு காண்கிறது. பழைய மூளை இம்ப்லாண்ட்கள் உலோகத்தால் செய்யப்பட்டதால் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறைகளுக்குள் செல்ல முடியவில்லை. ஆனால், MOTE, எம்.ஆர்.ஐ. ஸ்கேன்களுடன் எந்தப் பிரச்சினையும் ஏற்படுத்தாத பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சிறிய வயர்லெஸ் வடிவம் மற்றும் அளவு ஆகியவை, மூளையில் எரிச்சலையோ அல்லது திசுக்களின் எதிர்ப்பையோ தூண்டாமல் செயல்படுகிறது.

இந்தச் சாதனத்தை வைத்து எலிகளின் மூளையில் ஒரு வருடத்திற்கும் மேலாகச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மூளையுடன் மட்டுமல்லாமல், தண்டுவடம் போன்ற உடலின் மிக நுட்பமான பகுதிகளில் இருந்தும் சிக்னல்களைப் பதிவு செய்யும் ஆற்றல் இதற்கு உள்ளது. எதிர்காலத்தில் செயற்கை மண்டை ஓட்டுத் தகடுகளில் கூட இதனை எளிதாகப் பொருத்த முடியும் என விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.