போகி பண்டிகை என்றாலே பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழி தான் ஞாபகம் வரும். போகி பண்டிகை என்றால் தேவையில்லாத பொருட்களை தீயிட்டு அழித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்வார்கள். போகி பண்டிகை என்று செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
போகி பண்டிகைக்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
மழைக்காலத்தில் நோய்க்கிருமிகள் பரவும் ஆபத்து அதிகம். எனவே வீடு முழுக்க மஞ்சள், சாணம் தெளித்து சாம்பிராணி காண்பித்து சூழலை சுத்தமாக வைக்க வேண்டும். கிராமப்புறங்களில் வீட்டு வாசலில் மூலிகை காப்பான்களை கட்டி வைக்கலாம். அந்த மூலிகை காப்பான்களில் மாவிலை, நொச்சி, வேம்பு, ஆவாரம், மஞ்சள் கொத்து, பிரண்டை, தும்பை, துளசி ஆகியவை இருக்க வேண்டும்.
அது சிறந்த நோய் தடுப்பாக செயல்பட்டு குடும்பத்தையும் குடும்பத்தில் இருக்கும் கால்நடைகளையும் பாதுகாக்கும். அன்றைய காலகட்டத்தில் போகி பண்டிகை நாளில் பழைய ஓலைச்சுவடிகளை எடுத்து பழைய சிதைந்த ஏடுகளை நீக்கிவிட்டு புதிய ஏடுகளை சேர்ப்பார்கள். இதேபோல இந்த நாட்களில் புத்தகங்களை நாம் பராமரிக்கலாம்.
போகி பண்டிகைக்கு செய்ய கூடாத விஷயங்கள்:
சூரியன், இந்திரன் வீட்டு தெய்வங்களை வணங்கும் நாள் என்பதால் மாமிசம் சமைக்க கூடாது. போதை பொருட்கள், பகலில் உறக்கம் என எதுவும் இருக்க கூடாது. சிலர் போகி அன்று வெள்ளை அடித்து வீட்டை சுத்தப்படுத்துவார்கள். அப்படி இல்லாமல் போகிக்கு முன்னரே சுத்தப்படுத்த வேண்டும்.
நகரங்களில் சாஸ்த்திரத்திற்காக பழைய துணிகள், கிழிந்த பாய்கள், டயர் பிளாஸ்டிக் பொருட்களை எரித்து காற்றை மாசுபடுத்துகின்றனர். அப்படி செய்யக்கூடாது. மாறாக பழைய பொருட்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துவது சிறந்தது. இயற்கைக்கு மாறாக காற்றை மாசுபடுத்தும் விதமாக எந்த செயலையும் செய்யாமல் போகிப் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.