தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. உழவு தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அதிகாலை பொங்கல் வைப்போம். தை முதல் ஆணி மாதம் வரை உத்தராயனம் எனவும், ஆடி முதல் மார்கழி வரை இருக்கும் 6 மாதங்கள் தட்சிணாயனம் எனவும் அழைக்கப்படுகிறது. இதில் உத்தராயனம் என்பது தேவர்களின் பகல் பொழுது எனவும் தட்சிணாயனம் என்பது இரவு பொழுது எனவும் புராணங்கள் கூறுகிறது.

அந்த வகையில் பகல் பொழுதின் தொடக்கமான தை மாதம் முதல் நாள் மகர சங்கராந்தி. அதாவது பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சங்கராந்தி என்றால் நகர்தல் என பொருள்படும் அதாவது தை மாதம் முதல் நாள் சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நகர்வதால் மகர சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இது இந்திரனை வழிபடும் விழா என அன்றைய காலகட்டத்தில் கூறுவார்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் இந்த நாளில் நிகழ வேண்டியது அவசியம். போகி பண்டிகை என்று தேவையில்லாதவற்றை வெளியில் வைத்து விட வேண்டும். சாஸ்திரத்தில் வேண்டாதவற்றை எரிக்க வேண்டும் என கூறவில்லை.

எனவே வேண்டாத பொருட்களை வீட்டுக்கு வெளியே முறையாக வெளியேற்றி விட வேண்டும். இதனையடுத்து பூஜை செய்யும் இடத்தில் சந்திர, சூரியர்கள் கோலம் இட்டு பொங்கல் பானையை நடுவே வைத்து தீபாராதனை காட்டி நிவேதனம் செய்ய வேண்டும். சர்க்கரை பொங்கல் செய்வதுவே வழக்கம். சில வீடுகளில் வெண் பொங்கலும் சேர்ந்து செய்வார்கள். பின்னர் சூரிய பகவானை வணங்கி மந்திரங்களை கூறி நன்மை தருமாறு வழிபட வேண்டும்.