
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி பகுதியில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி(33). இவர் திண்டுக்கல் மாவட்ட பாஜக ஒன்றிய இளைஞரணி நிர்வாகியாக பதவியில் உள்ளார். இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்களில் தனது வீட்டில் கத்தியோடு பின்னணி பாடலுக்கு ஏற்றவாறு ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பழனி தாலுகா காவல்துறையினர் வன்முறையான வீடியோ என ராஜீவ் காந்தி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பழனி மாவட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்டது எதிர்த்து கடந்த வாரம் பொதுவெளியில் பேருந்தை மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து குடிபோதையில் பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக இளைஞர் அணி நிர்வாகி வீடியோ வெளியிட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.