தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசி இருந்தார். இது தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில்,  நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி இது குறித்து பேசி இருந்தார். சனாதனம் குறித்து பேசியதற்கு மத்திய அமைச்சர்கள் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும்,  உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு ஆதரவாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், பிரதமர் மோடி நேற்றைய மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் மணிப்பூர் பற்றியோ, சிஏஜி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள ஏழரை இலட்சம் கோடி மதிப்பிலான முறைகேடு பற்றியோ பேசாத நிலையில் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து பேசி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஆர்எஸ்எஸ்-இன் தலைவர் மோகன் பகவத் ஒரு கருத்து சொல்லி இருக்கிறார்.

2000 ஆண்டுகளாக மனிதர்களை நாம் பின்னுக்கு தள்ளிவிட்டோம். அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும் வரை இட ஒதுக்கீடு உள்ளிட்ட சில சிறப்புத் தீர்வுகள் இருக்க வேண்டும் என பேசி இருக்கிறார். எனவே உதயநிதி பேசியது தொடர்பாக பாஜகவினருக்கு விளக்கம் வேண்டும் என்றால் ?  மோகன் பகவத்தை கேட்டு தெரிந்து கொள்ளட்டும். அரசியலுக்காக மத உணர்வை கிளறி ஆதாயம் தேடும் அற்ப  அரசியலை செய்யும்  பாஜகவிடம் இருந்து அமைப்பு சட்டத்தின் மீது மாறா பற்று கொண்ட தலைவர்கள் நாட்டை காக்கும் கடமையை வேகம் எடுப்பார்கள்.

இனம், மொழி, ஜாதி வேறுபடுத்தி அனைவரும்   ஒரு தாய் மக்களாக வாழும் வாழ்க்கையை உறுதி செய்து வரக்கூடிய இயக்கம் திமுக. கொள்கையை அறிவால் பிரச்சாரம் செய்தவர்களே  தவிர எந்த காலத்திலும் வன்முறையிலும் நம்பிக்கை இல்லா இயக்கம். அத்தகைய இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்கும் அரசியல் செய்ய நினைத்தால் அந்த புதை குழியில் பாஜக தான் போய் மூழ்கும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.