தமிழகத்தில் தற்போது பாஜக மற்றும் அதிமுக கூட்டணியாக இருந்து வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  நடைபெற்ற சில சம்பவங்கள் மற்றும் பாஜகவில் இருந்து 4 நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்தது என அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி வருவதால் தற்போது கூட்டணியில் விரிசல் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்ததற்கு பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திராவிட கட்சிகளை கடுமையான முறையில் விமர்சித்ததோடு நான் ஜெயலலிதா போன்ற ஒரு தலைவன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலை பேசியதற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, எங்கள் கட்சியில் விருப்பப்பட்டு இணைகிறார்கள். எனவே அரசியல் காழ்புணர்ச்சி காட்டாமல் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும். எனக்கும் என் மகனுக்கும் பதவி கொடுத்தது எல்லாம் ஜெயலலிதா தான். எனவே தனிப்பட்ட முறையில் தாக்குவது சரியல்ல. அரசியல் ரீதியாக மோதிப் பார்க்கலாம். பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுகிறார்கள் என்றால் அந்த கட்சியின் தலைவர் தான் அதை கட்டுப்படுத்த வேண்டும். எங்கள் கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கிளர்ந்து எழுந்தால் அவர்களால் ஈடு கொடுக்க முடியாது. எனவே அது மாதிரி எல்லாம் செய்யக்கூடாது என்று கூறினார்.