தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக இடையே தற்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. பாஜகவில் இருந்து 4 பேர் விலகி அதிமுகவில் இணைந்ததால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜகவில் இருந்து நிர்வாகிகள் விலகி செல்வதற்கு அண்ணாமலை திராவிட கட்சிகளின் மீது கடுமையான விமர்சனத்தை வைத்திருந்ததோடு ஜெயலலிதா, கலைஞர் போன்ற நானும் ஒரு தலைவன் என்று கூறியிருந்தார். இதற்கு தற்போது அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் அதிமுக சார்பில் மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவரிடம் பாஜகவில் இருந்து ஆட்களை கொண்டுவந்து தமிழகத்தில் திராவிட கட்சிகள் வளர்வதாக அண்ணாமலை குற்றம் சாட்டியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஜெயக்குமார் கூறியதாவது, அதிமுக என்பது கண்ணாடி கிடையாது. கல்விசினால் உடைந்து விடுவதற்கு. அது ஒரு சமுத்திரம். அதன் மீது கல் வீசினால் அந்த கல் தான் காணாமல் போகும். சமுத்திரம் இருந்து கொண்டு தான் இருக்கும். அலைகள் வீசிக்கொண்டு தான் இருக்கும். மாற்றுக் கட்சியில் இருந்து விருப்பப்பட்டு வருகிறார்கள். நாளை திமுகவில் இருந்து கூட வரலாம். எங்கள் கட்சி அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. எனவே அரசியல் காழ் புணர்ச்சி காட்டாமல் பெருந்தன்மையோடு நடந்து கொள்வது தான் சரி என்று கூறினார்.