தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் தற்போது கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். இதனால் தற்போது அதிமுக மற்றும் பாஜக இடையே வார்த்தை மோதல் நிலவி வருகிறது. பாஜகவில் இருந்து விலகுபவர்களை எடப்பாடி பழனிச்சாமி சேர்த்ததற்கு பாஜகவில் இருப்பவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதன்பிறகு பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தது குறித்து அண்ணாமலை கூறும் போது, கட்சியிலிருந்து 4 பேர் வெளியே சென்று விட்டால் கட்சி ஒன்றும் முடங்கி விடாது. முன்பை விட இன்னும் வேகமாக தான் செயல்படும்.

கட்சியின் தலைவர் முக்கிய முடிவு எடுக்கும்போது சிலர் கோபித்துக் கொண்டு வெளியே போக தான் செய்வார்கள். நானும் ஜெயலலிதா கலைஞர் போன்று ஒரு தலைவர். நான் பெரிய ஆள் என்று சொல்லவில்லை தலைவர் என்ற வார்த்தையை மட்டும் தான் சொல்கிறேன் என்று கூறினார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலை தன்னை ஜெயலலிதா போன்ற தலைவர் என்று கூறியது குறித்து பேசி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ஜெயலலிதா போன்ற தலைவர் என்று சொல்வதற்கு யாருக்கும் தகுதி கிடையாது. நான் அண்ணாமலை எப்படி தலைவர் ஆனார் என்பது குறித்து விமர்சிக்க விரும்பவில்லை. அதன் பிறகு ஜெயலலிதா போன்ற ஒரு தலைவர் இனி பிறக்கப் போவது கிடையாது. அந்த அளவுக்கு ஜெயலலிதா நிர்வாக ஆற்றல், திறமை அரவணைத்து செல்வது, இரும்பு கரம் கொண்டு ஒடுக்குதல் என அனைத்திலும் சிறந்து விளங்கினார். மேலும் செஞ்சிக்கோட்டை ஏறுகிறவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது என்று கூறினார்.