ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள  அஜ்மீர் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவர் ரோஹித் சைனி, தனது மனைவி சஞ்சுவைக் கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித், அதே பகுதியைச் சேர்ந்த ரிது சைனி என்பவருடன் கள்ள உறவில் இருந்து வந்தார்.

இவர்களது உறவுக்கு ரோஹித் மனைவி சஞ்சு தடையாக இருந்ததால், ரிதுவின் தூண்டுதலின் பேரில் ரோஹித் தனது மனைவியைக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 10 அன்று, சஞ்சு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். முதலில், திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்து சஞ்சுவைக் கொன்று விலை உயர்வான  பொருட்களைத் திருடிவிட்டதாக ரோஹித் போலீசாரிடம் நாடகமாடினார்.

ஆனால், விசாரணையில் ரோஹித்தின் பதில்கள் முரண்பாடாக இருந்ததால், போலீசார் சந்தேகமடைந்தனர். கிடுக்குப்பிடி விசாரணையில், ரோஹித் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

காதலி ரிதுவுடன் புது வாழ்க்கை தொடங்குவதற்காக, சஞ்சுவைக் கழுத்தறுத்து கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். இந்த பயங்கர சம்பவத்தில் ரோஹித்துடன், கொலையைத் தூண்டிய ரிது சைனியும் கைது செய்யப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் அஜ்மீர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.