தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுக கட்சியும், தமிழக மக்களும் பாஜகவை எதிர்க்கட்சியாக ஏற்கவில்லை. தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவது போன்று ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகிறார்கள். 2001-ல் திமுக தோளிலும், 2021-ல் அதிமுக தோளிலும் சவாரி செய்தே பாஜக தங்கள் கட்சிக்கு எம்எல்ஏக்களை பெற்றுள்ளது என்று கூறியிருந்தார். அதோடு பாஜக தேர்தலில் தனித்து போட்டியிட்டால் அவர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் கடந்த 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது தனியாக அல்ல. சுதந்திரா மற்றும் சிபிஎம் கட்சிகளுடன் கொண்ட கூட்டணியால் தான் வெற்றி பெற்றது. இதேபோன்று கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் திமுக தனி பலத்தால் ஆட்சிக்கு வரவில்லை. 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் தான் ஆட்சிக்கு வந்தது. 1967-ம் ஆண்டிலிருந்து திமுக தனித்து போட்டியிட்டதே கிடையாது. அரசியல் ஆதாயத்திற்காக பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து தான் போட்டியிடுகிறது. அப்படி கூட்டணி அமைத்தும் பல தேர்தல்களில் திமுக தோல்வியை தழுவி இருக்கிறது. எதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.

துணை பிரதமராகும் உங்கள் லட்சியம் கலைந்து போய் நெடுங்காலம் ஆகிவிட்டது. வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் பாரதப் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும். தமிழக பாஜக கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டது உண்டு. இனிவரும் காலங்களில் அதை செய்யவும் தயங்காது. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன் திரு மு.க ஸ்டாலின் அவர்களே‌, கூட்டணி இல்லாமல் போட்டியிட தயாரா என்று பதவிட்டுள்ளார். மேலும் பாஜக அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்டது தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.