சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ள நிலையில் 179 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது. சென்னை மாநகராட்சி மேயராக பிரியா ராஜன் இருக்கிறார். இவருடைய தலைமையின் கீழ் கவுன்சிலர்கள் அனைவரும் சிறப்பான முறையில் செயல்பட்டு‌ வருகிறார்கள். இந்நிலையில் கவுன்சிலர் கயல்விழி ஜெயக்குமாரின் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த மாநகராட்சிக்கே முன் உதாரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர் 179-வது வார்டு கவுன்சிலராக இருக்கும் நிலையில், வாரந்தோறும் ஏரியா சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த திட்டத்தை ஜனவரி மாதம் 2023 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தலாம் என்று சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருந்த நிலையில், கடந்த வருடம் ஏப்ரல் மாதமே கவுன்சிலர் கயல்விழி இந்த திட்டத்தை கையிலெடுத்து விட்டார்.

179-வது வார்டில் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் போன்ற பகுதிகள் வரும் நிலையில், கிராம சபை கூட்டங்களை போன்று ஏரியா சபை கூட்டங்களை நடத்தி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் கவுன்சிலர் கயல்விழி ஈடுபட்டுள்ளார். அதோடு மெட்ரோ வாட்டர், மாநகராட்சி, மின்வாரியம் போன்ற துறைகளை சேர்ந்த அதிகாரிகளை நேரில் வரவழைத்து பொதுமக்களின் சந்தேகங்களை கேட்டறியுமாறும் செய்கிறார். மேலும் ஏரியா சபைக்கு என்று 10 பதவிகள் உள்ள நிலையில், 5 பதவிகளை பொதுமக்களுக்கும், 5 பதவிகளை நிர்வாகிகளுக்கும் கயல்விழி கொடுத்துள்ளார். இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.