மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் இடையிலான விவாகரத்து ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மெலிண்டாவிற்கு இறுதிக்கட்டமாக 71,100 கோடி ரூபாய் ஜீவனாம்சத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு 27 ஆண்டுகால மணவாழ்க்கையை முடித்துக் கொள்வதாக இந்தத் தம்பதி அறிவித்த நிலையில், விவாகரத்து ஒப்பந்தப்படி மெலிண்டாவிற்கு மொத்தம் 1,12,800 கோடி ரூபாய் வழங்க பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டிருந்தார். இதில் ஏற்கனவே 41,700 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மீதமுள்ள தொகையும் வழங்கப்பட்டு விவாகரத்து ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இருவரும் இணைந்து கடந்த 2000 ஆம் ஆண்டு தொடங்கிய பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் கல்வி, சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பணியாற்றி வந்தனர்.
விவாகரத்திற்குப் பின்னரும் இருவரும் அந்த அறக்கட்டளையில் இணைந்து செயல்பட்ட போதிலும், மெலிண்டா தற்போது தனது சொந்தத் தொண்டு நிறுவனமான பிவொட்டல் பிலாந்தொபீஸ் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகத் தனிப்பாதையில் செயல்படத் தொடங்கியுள்ளார்.
உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்து ஒப்பந்தங்களில் ஒன்றாக இது கருதப்படுவதுடன், மைக்ரோசாப்ட் நிறுவன பங்குகள் மற்றும் சொத்து மதிப்பிலும் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
