சென்னை மாதாவரம் போலீஸ் நிலையத்தில் நித்யா என்பவர் ஏட்டாக பணிபுரிந்துள்ளார். இவர் மதுரையைச் சேர்ந்த                           சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ என்பவருடன் மதுராந்தகம் அருகே ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திடீரென சாலையில் தாறுமாறாக ஓடிய கார் இவர்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். இதனை தொடர்ந்து விபத்தில் பலியான நித்யாவின் உடல் உடற்கூறு பரிசோதனைக்கு பின் அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கசவபட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் 21 குண்டுகள் முழங்க காவல்துறையினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதில் விபத்தில் பலியான நித்யாவின் தந்தை சௌந்தர்ராஜன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார்.

மேலும் தாய் சரஸ்வதி வேடசந்தூரிலுள்ள புகையிலை ஆராய்ச்சி மையத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இதில் நித்யாவிற்கு 2 மூத்த சகோதரிகளும், 1 அண்ணனும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். நித்யா சிறுவயது முதலே போலீஸ் பணியில் சேர வேண்டும் என்று ஆசையாக இருந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.ஏ தமிழ் இலக்கியம் படித்துள்ள நித்யா விளையாட்டுப் போட்டிகளிலும் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். அதோடு கராத்தே, குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களையும் வாங்கி குவித்துள்ளார். 16 வருடங்களாக காவல்துறையில் பணியாற்றி வந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். திருமணம் ஆகாமல் காவல்துறையில் தொடர்ந்து துடிப்பாக பணியாற்றி வந்த நித்யா விபத்தில் பலியான சம்பவம் கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.