மத்தியப்பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டம் பிதம்பூர் பகுதியில், திருமணமாகாமல் குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த பிரியா யாதவ் மற்றும் லோகேந்திர மால்வியா ஆகியோருக்கு இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த சண்டையை தொடர்ந்து மனமுடைந்த பிரியா, தனது வீட்டை விட்டு வெளியேறி அண்டை வீட்டில் தங்கியிருந்தார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த லோகேந்திரா, தனது கோபத்தை பிரியாவின் குழந்தைகள் மீது காட்டி, ஹேமந்த் (வயது 7) மற்றும் நிஷா (வயது 3) ஆகிய இருவரையும் தூக்கி கொலை செய்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பிறகு, குழந்தைகள் தூங்கி கொண்டிருப்பது போல காட்ட, அவர்களை ஒரு கம்பளத்தில் மூடி, அருகில் தூங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மறுநாள் காலை பிரியா வீடு திரும்பி தனது பிள்ளைகளை எழுப்ப முயன்றபோது, அவர்கள் பதில் சொல்லவில்லை. உடனே அவளுக்கு சந்தேகம் எழுந்தது. அருகிலுள்ளவர்கள்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனே விசாரணை நடத்தினர். சந்தேகத்திற்கு இடமளித்த லோகேந்திராவை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையின் போது, லோகேந்திரா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கூறியதாவது, “பிரியாவுடன் ஏற்பட்ட சண்டையால் மிகுந்த கோபம் வந்தது. அதனால், அவர் இல்லாதபோது அவரது பிள்ளைகளை வன்முறையாக தூக்கி கொலை செய்தேன்,” என ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் தேவாஸ் மாவட்டத்திலும், மாநில அளவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரியா யாதவ், தனது முன்னாள் கணவர் விஷ்ணு கட்டாராவை விட்டு பிரிந்து, லோகேந்திராவுடன் கடந்த சில மாதங்களாக துணை வாழ்க்கை நடத்தி வந்தார். தற்போது, லோகேந்திராவை கைது செய்து  போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரட்டை குழந்தை கொலை வழக்கு, மத்தியப்பிரதேச மக்களிடம் பெரும் சோகத்தையும் கோபத்தையும் கிளப்பியுள்ளது.