ஹர்மன்பிரீத் கவுர் அபாரமாக ஆடி அரைசதம், விளாச வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி..

டாக்காவில் உள்ள ஷேரே பங்களா தேசிய மைதானத்தில் இன்று நடைபெற்ற டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தியது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் இந்த போட்டியில் சிறப்பாக விளையாட 22 பந்துகள் மீதமுள்ள நிலையில், இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு  114 ரன்கள் எடுத்தது, அதற்கு பின் களமிறங்கிய இந்திய அணி 16.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்த இலக்கை எட்டியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள் சீரான தொடக்கத்தை ஏற்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 27 ரன்கள் சேர்த்தனர். ஷதி ராணி 22 ரன்களும், ஷமிமா சுல்தானா 17 ரன்களும் எடுத்தனர். மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த சோபனா மோஸ்டாரி மெதுவாக விளையாடி 33 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்.மிடில் ஆர்டரில் ஷோர்னா அக்தர் 28 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை 100க்கு மேல் எடுத்தார். இந்திய அணியில் பூஜா வஸ்த்ரகர், மீனு மணி மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

20 ஓவரில் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு முதல் அடி கிடைத்தது. ஷாஃபாலி வர்மா, 3வது பந்தில் ரன் எடுக்காமலேயே மருஃபா அக்தரிடம் ஆட்டமிழந்தார்.இதன் பிறகு ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனா இடையே 21 ரன் பார்ட்னர்ஷிப் இருந்தது, பின் சுல்தானா கட்டூன் ஓவரில் ஜெமிமா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் டீம் இந்தியா அழுத்தத்தில் இருந்தது, ஆனால் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் – மந்தனா ஜோடி சிறப்பாக ஆடி 70 ரன்கள்சேர்த்தது. ஸ்மிருதி 34 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார்.

ஸ்மிருதி ஆட்டமிழந்த பிறகும், ஹர்மன்ப்ரீத்தின் பேட் இங்கு நிற்கவில்லை. அவர் 54 ரன்களில் அபாரமாக அரை சதம் விளாசினார். ஹர்மன்பிரீத் கவுர் 35 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் யாஸ்திகா பாட்டியா 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி  வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் மோதும் தொடரின் அடுத்த போட்டி ஜூலை 11ம் தேதி இதே மைதானத்தில் நடக்கிறது.