ஆக்ராவில், பகேஷ்வர் தாம் தலைமை பூசாரி திரேந்திர கிருஷ்ண ஷாஸ்திரியின் ஆன்மிக வருகை, வன்முறையாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 6 அன்று ஆக்ராவில் நடைபெறவிருந்த பொது நிகழ்ச்சி, பெரும் கூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டதால், ஷாஸ்திரி கந்தாரி பகுதியில் உள்ள நளந்தா பிரைட் அடுக்குமாடி குடியிருப்பில் புஷ்கல் குப்தாவின் வீட்டிற்கு சென்றார்.

ஆனால், அவரை சந்திக்க விரும்பிய அனைவராலும் சந்திக்க முடியவில்லை, இதனால் எழுந்த மோதல் ஒரு பெண்ணை தாக்கும் வன்முறையாக உருவெடுத்தது.

நளந்தா பிரைட் குடியிருப்பில் வசிக்கும் நேஹா குப்தா, தனது புகாரில், ஷாஸ்திரியை சந்திக்க முடியாததற்கு தன்னை குற்றம் சாட்டி, அஜய் சவுகானின் மனைவி தன்னை திட்டியதாகவும், பின்னர் அஜய் சவுகான், சஞ்ஜய் சவுகான், அவர்களது மனைவிகள் மற்றும் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து தன்னை கழுத்தைப் பிடித்து தள்ளி, அடித்து உதைத்ததாகவும் கூறினார்.

தனது முதிய தாய் தலையிட்ட பின்னர் தாக்குதல் நிறுத்தப்பட்டதாகவும், மிரட்டல்கள் வந்ததாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஹரி பர்வத் காவல் நிலையத்தில் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது. உதவி ஆணையர் அக்ஷய் சஞ்ஜய் மகாதிக், “விசாரணை நடந்து வருகிறது, குற்றவாளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.