தென்னிந்திய சினிமாவில் மூத்த நடிகராக வலம் வருபவர் சரத்பாபு. இவர் கடந்த 1977-ம் ஆண்டு பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சரத்பாபு ரஜினியுடன் சேர்ந்து அண்ணாமலை, முத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக வசந்த முல்லை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 50 வருடங்களாக திரைத்துறையில் பயணிக்கும் நடிகர் சரத்பாபு இதுவரை 200 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நடிகர் சரத்பாபுக்கு 70 வயது ஆகும் நிலையில் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், உடல் உறுப்பு நோய் அலர்ஜி பிரச்சனை போன்றவைகளால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் சரத்பாபுவின் உடல்நிலை மோசமாகி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்ஸிஸ் நோய் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ஐசியூவில் இருக்கும் சரத் பாபுவுக்கு வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை வழங்கப் படுகிறது. மேலும் நடிகர் சரத்பாபு விரைவில் குணமாக வேண்டும் என பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.