வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்த அடையாளம் தெரியாத பெண் தனது 3 மாத பெண் குழந்தையை அருகே இருந்த மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் மூதாட்டி குழந்தையை காட்பாடி ரயில் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த பெண் மோத்தக்கல் கிராமத்தில் வசிக்கும் கலைச்செல்வி என்பது தெரியவந்தது.

இதனால் போலீசார் அந்த கிராமத்திற்கு சென்று கலைச்செல்வியிடம் விசாரித்தனர். அப்போது குடும்ப வறுமை காரணமாக குழந்தையை மூதாட்டியிடம் விட்டு விட்டு வந்ததாக கலைச்செல்வி தெரிவித்தார். இதனை தொடர்ந்து ரயில்வே எஸ்.பி பொன் ராமு கலைச்செல்வி, அவரது கணவர் விஜய் ஆகியோரை சென்னை எழும்பூரில் இருக்கும் ரயில்வே எஸ்.பி அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்தார். இதனையடுத்து அறிவுரை கூறி குழந்தையை மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்தார்.