
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 36 வயது பெண் தனது கணவருடன் திருப்பூரிலுள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆகவே அங்கேயே வீடு எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். இந்நிலையில் அப்பெண் 2-வது முறையாக கர்ப்பம் அடைந்ததால் மருத்துவ பரிசோதனைக்காக தன் தாயார் வசிக்கும் சித்தூர் மாவட்டத்திற்கு செல்ல கோவையிலிருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில் பொது வகுப்பு பெட்டியில் சென்றுள்ளார். இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.வி குப்பம் இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது அப்பெண் ரயிலிலுள்ள கழிப்பறையை பயன்படுத்த வந்துள்ளார்.
அப்போது கழிப்பறை அருகே அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் பெண்ணை வழிமறித்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை எதிர்பாராத அப்பெண் கூச்சலிட சக பயணிகள் அங்கு வந்தனர். அந்த நேரத்தில் இளைஞர் ஓடும் ரயில் இருந்து அப்பெண்ணை கீழே தள்ளிவிட்டு வேறு ஒரு பெட்டிக்கு மாறி தப்பியுள்ளார்.
பெண் கீழே விழுந்ததை பார்த்த சக பயணிகள் உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததன் பெயரில் அங்கு வந்த காவல்துறையினர் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த கற்பிணி பெண்ணை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் கை மற்றும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது குறித்து தகவல் வெளியானதை தொடர்ந்து காவல்துறையினர் 2 தனி படைகள் அமைத்து கர்ப்பிணி பெண்ணை தள்ளிவிட்ட நபர் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபர் கே.வி குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த ஹேமராஜ் என்பதும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓடும் ரயிலில் பெண் பயணிடம் செல்போன் பறிப்பு வழக்கிலும், 2024ஆம் ஆண்டு 29 வயது இளம்பெண் கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டு இரண்டு முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டு சமீபத்தில் ஜாமிலில் வெளியே வந்திருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஹேமராஜை கைது செய்ததோடு தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணி பெண்ணின் வயிற்றிலேயே சிசு இறந்ததாக தகவல் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இறந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.