ஈரோடு மாவட்டத்தின் அருகே எல்லப்பாளையம் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜமாணிக்கம். இவர் ஒரு வழக்கறிஞர். இவரது வீட்டின் அருகே இளநீர் வியாபாரம் செய்பவர் அருணகிரி. இவருக்கும், வழக்கறிஞர் ராஜமாணிக்கத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவ நாளன்று இளநீர் வியாபாரி அருணகிரி, ராஜமாணிக்கத்தின் வீட்டின் முன்புற கேட்டை தாண்டி குதித்து அரிவாளுடன் சென்று குடும்பத்தினரை மிரட்டி உள்ளார். மேலும் ராஜமாணிக்கத்தை தாக்க அவரை தேடி உள்ளார். அந்த சமயம் ராஜமாணிக்கம் வெளியே சென்றதால் நீண்ட நேரம் வீட்டின் முன் ராஜமாணிக்கத்தை தாக்குவதற்காக அருணகிரி காத்திருந்துள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் அருணகிரியை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனை அறிந்த ராஜமாணிக்கம் அவரது வீட்டின் முன்பு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் அருணகிரி மற்றும் அவரது மனைவி, சகோதரர் ஆகிய மூன்று பேர் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மூன்று பேரையும் தேடி வந்தனர். இதனை அடுத்து ஈரோடு மத்திய பேருந்து நிலையம் பகுதியில் தலைமறைவாகிய அருணகிரி மற்றும் அவரது மனைவி, சகோதரரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பின்னர் சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.