ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் மந்திர மூர்த்தி டைரக்டில் சசிகுமார் நடித்திருக்கும் படம் “அயோத்தி”. அயோத்தியில் இருந்து  இராமேஸ்வரம் வரும் வட நாட்டு குடும்பத்தினரை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருக்கிறது. கடந்த மார்ச் 3ம் தேதி வெளியாகிய இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் சசிகுமாருடன் குக் வித் கோமாளி புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர்.

இந்நிலையில் அயோத்தி திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டு இருக்கிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார். இதுபற்றி சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தி படத்தை பார்த்து நெகிழ்ந்தேன். மதம்,வேதம், தருமம் இதையெல்லாம் தாண்டியது மனிதம் என்பதை தான் இந்த கதை கூறுகிறது. இது பார்வையாளர்களுக்குள் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.