ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரையில், விடுமுறை தினமான நேற்று மக்கள் கூட்டமாக இருந்தபோது இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆஸ்திரேலியாவையே உலுக்கிய இந்த கொடூரத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு அந்நாட்டுப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தனது ஆழ்ந்த அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 50 வயது சஜித் அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகனான 24 வயது நவீத் அக்ரம் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் தந்தை மற்றும் மகன் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இவர்கள் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், தற்போது இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாகத் தெலுங்கானா காவல்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள செய்தியில், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான சஜித் அக்ரம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் கடந்த 1998ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போதும் அவர் இந்தியக் கடவுச்சீட்டை வைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
எனினும், சிட்னியில் நடந்த இந்த கொடூரத் தாக்குதலுக்கும் இந்தியாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தெலுங்கானாவில் அவருக்கு எந்தவிதமான உள்ளூர் தொடர்புகளோ அல்லது செல்வாக்கோ இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
